Posts

Showing posts from March, 2022

இறைவன்

காலை வணக்கம் புலப்படாதவனாக இருந்தாலும் ஐம்புலன்களின் பேரன்பு விழுமியக் கட்டகத்தில் கட்டுப்படுபவனே அந்த ஆண்டவன். இந்த நாள் நமக்காக.

மௌனம்

காலை வணக்கம். மௌனத்தின் அதிர்வுகளை வாசிக்கத் தெரிந்தவனே ஞானி ஆகிறான். இந்த நாள் நமக்காக

இன்னலும் இன்பமும்

காலை வணக்கம். ஒரு காற்றுக்கு சாய்ந்தால்  மறு காற்றுக்கு நிமிர்ந்து நிற்கும் அந்த நாணல்... ஒரு நேரத்தில் காய்ந்த புல் மறுமழைக்கு பசுமை போர்த்தி நிற்கும்... பறக்கும் நாளெல்லாம் இரை கொடுக்கும் திசையாக பறவைக்கு என்றுமே இருந்ததில்லை.. குனிந்து நிமிர்ந்த குழந்தை தான் கனிந்து வளர்ந்து வாழ்வு பெறும்...  ஆம்... காலச்சக்கரத்தின் சுழற்சியில் இன்னலும் இன்பமும்  பின்னியே கிடக்கும்... இன்று இல்லையெனில் நாளை நிச்சயமாய் விடியல் வரும்... நம்பிக்கையோடு நடப்போம்... இந்த நாள் நமக்காக.

வார்த்தைகள்

காலை வணக்கம் அடுக்கப்பட்ட கற்கள் நூல் அளவையின் நேர்கோட்டில் நின்றால் அழகும் பாதுகாப்பும் நிச்சயம். பொறுக்கி எடுக்கப்பட்ட வார்த்தைகள் பொறுமையாய் உரையாடல்களில் கோர்க்கப்படும் போது உறவுகள்  நிச்சயம். இந்த நாள் நமக்காக.

தனித்துவம்

காலை வணக்கம் ஒரு புள்ளி ஒரு வாக்கியத்தின் முடிவு. சில நேரங்களில் மூன்று புள்ளிகள் வாக்கியத்தின் தொடர்ச்சி. ஒரு மரம் தனித்து இருந்தால் எல்லோரின் கவனமும் அதன் மேலே. பல மரங்கள் சேர்ந்திருந்தால் அதுவும் மறக்கப்படலாம். சில நேரங்களில் கொள்கைக்காக, தனித்துவத்திற்காக ஒதுக்கப்படலாம்.... ஆனால் கால ஓட்டத்தில் நீ தோப்பாக மாறுவாய்...  நம்பிக்கையோடு இரு...   இந்த நாள் நமக்காக

இப்படித்தான்...

காலை வணக்கம். காற்றடித்த திசையில் காகிதங்கள் பறக்கலாம் ....  ஓட்டத்தின் வேகத்தில் நதிகள் திசைகளை வரையறுத்து பயணிக்கலாம்...  இரைகளைத்தேடி இறக்கைகளை  விரிக்கும் பறவைகள் கூட பாதைகளை மாற்றலாம்...  ஆனால் பகுத்தறிவு பெற்ற மனிதன் 'எப்படியும்' என்பதைவிட 'இப்படித்தான்' என்று வாழும் போதுதான் மானுடத்திற்கு பெருமை...  இறைவனுக்கும் புகழ் சேர்க்கிறான்          இந்த நாள் நமக்காக.

ஈரமான இதயம்...

காலை வணக்கம். காலஓட்டத்தில் பூத்திருக்கும் சில ஆச்சரியங்கள்... காகிதத்தில்  கனவு மாளிகை கடல் மணலில் சிற்பங்கள் நூல் அடுக்குகளில் ஓவியங்கள் சொல் வரிசைகளில் மந்திரங்கள் ஒலியின் வேகத்தைவிட விமானங்கள் வீட்டின் முற்றத்தில் சொகுசுகள் எல்லாம் சரிதான் ஆனால் இதயங்களை மட்டும் ஈரமாய் வைத்துக்கொள்ள மறுப்பது ஏன்? மானுடமே! தோழமைக்கு நீரூற்றி  தெய்வீகம் காணலாமே? இந்த நாள் நமக்காக.

ஒன்றிணைவோம்

காலை வணக்கம். விதையின் வலி விருட்சம். தாயின் வலி சேய். உழவனின் வலி உணவு. ஒருவரின் வலி மற்றவருக்கு வாழ்வு. நீயின்றி நானில்லை. நான் தனித்திருக்க உரிமையில்லை. தேனடையின் ஈக்களாக ஆலமரத்து பறவைகளாக வேம்புகளின் பூக்களாக ஒட்டிக்கொள்வோம். இந்த நாள் நமக்காக.

வாய்மை

Gd Mng...Wishing you a great and happy day of feast of St. Joseph's.  Let this day bring more God's blessings and keep us closer to Him.  காலை வணக்கம். வாய்மை பாராட்டுபவர் வையகம் நினைக்கப்படுபவர். இந்த நாள் நமக்காக

எல்லோரும் கடவுளின் முகங்களே

காலை வணக்கம். கையேந்தி நிற்கும் எளியவரின் முகங்கள்... வறியவரின் முகம் பார்த்து இரங்குபவர்கள்... மற்றவருக்கு உதவ முடியவில்லையே என ஏங்குபவர்கள்... எல்லோருமே கடவுளின் முகங்களே. ஆம்... நிழல் கொடுக்கும் மரங்களாக... நன்றியுள்ள ஜீவன்களாக... பிறர் உணர்வு மதிப்பவர்களாக... வாழ்வதே மானுடம். இந்த நாள் நமக்காக.

யாரும் யாருக்கும் சிறியோர் அல்ல

காலை வணக்கம் ஆழிப்பேரலையின்  அகங்கார இரைச்சலுக்கு முன்  கூடிக் குதுகலிக்கும் குழந்தையின்  கும்மாளம் ஒரு பொக்கிஷமே. பெரு வானப் பரப்பில் நீள் சிறகு விரித்து உச்சத்தில் பறக்கும் கழுகுகளை விட கைச் சிறகு விரித்து வான் அளக்க விரும்பும் சிட்டுக்குருவியே  சீதனமாய் வரவேண்டும். யாரும் யாருக்கும் சிறியோர் அல்ல... அவரவரின் ஆளுமை  அங்கீகரிக்கப்பட வேண்டும். இந்த நாள் நமக்காக.

தடை போட நாம் யார்?

காலை வணக்கம் பெய்யும் மழை எல்லோருக்கும் தான்... ஈரமான இதயம் எல்லோருக்கும் இறைவனால் ... வெள்ளமாய் ஊற்றெடுக்கும் இதயத்தின் அன்பிற்கு தடைபோட நாம் யார்? எல்லோருக்கும் எல்லாமுமாய் இருப்போமா? இந்த நாள்   நமக்காக

கரம் குவித்து...

காலை வணக்கம்  தாழ்ந்த சிந்தனைக்கு சுயநலம் போதும். தரமானச் சிந்தனைக்கு படைத்தவன் வேண்டும். கண் மூடுவோம்... கரம் குவிப்போம்... உயர்வான உள்ளுதலுக்காய்  கடவுளின் துணை கேட்போம். இந்த நாள் நமக்காக.

அல்லவை தேய்ந்து...

காலை வணக்கம். அல்லவை தேய்ந்து  நல்லவை வளர, என்ன தேவை? சிவந்து நிற்கும் சினம் வெண்மையாக வன்மையான சொற்கள் மென்மையாக  ஆர்த்து எழும் உணர்வுகள் அமைதியாக வலம் வர வேண்டும். முயற்சிப்போமா? இந்த நாள் நமக்காக.

பெண்கள் தினம்

காலை வணக்கம். அந்திப்பொழுது என்றால்  அந்த சூரியன் தான் அழகு. விண்மீன்கள் ஆயிரம்  வானம் கொண்டாலும்  ஒற்றை நிலவு தான் அந்த இரவுக்கு அழகு. உறவுகள் என்று வீடுகள் நிறைந்தாலும்  ஒரு பெண் குழவி தான்  வீட்டிற்கு உயிர்ப்பு. அவள் இல்லையெனில் அவ்வீடு வெற்றிடமே. நறுமணம் தரும் பெண் மனமே! வாழ்த்துகிறோம்... நன்றியுடன் நினைக்கிறோம் இந்த நாள் நமக்காக.

விண்ணுலகில் இடம்

காலை வணக்கம். அழியும் பொருட்களைத் தவிர்த்து  அனைத்தையும் படைத்த ஆண்டவனுக்கு நேரம் கொடுத்து  கண்முன் தெரியும் உறவுகளுக்கு கருணை காட்டு. அது மறு வாழ்வில் படைத்தவனுக்கு அருகில் உனக்காய் இடத்தை தக்க வைக்கும். இந்த நாள்  ஓய்வு நாள்... வாழ்த்துக்கள்.

நோன்பு

காலை வணக்கம். பிறழ்ந்த வாழ்வுக்காய் மனத்துயர் பட்டு  மாண்பினைத் தரும் பண்புகளுக்கு ஏங்க வைப்பதே உண்மையான நோன்பு... கடவுளுக்கு பிடித்த  பரிசு. இன்றைய நாள் நமது ஆகட்டும்.

மனமாற்றம்

காலை வணக்கம். அரிதாரமும் சொகுசும் மானுடத்திற்கு பிடிக்கும்....  ஆனால் படைத்தவனுக்கு...  தான் படைத்த தொடக்க மனிதனைத் தான் பிடிக்கும். இன்று முற்றங்களில் மனிதர்களைச் சூழ்ந்து  சொகுசுகள்... ஆனால் கட்டப்பட்ட வீடுகள் (இதயங்கள்) வெறுமையாய் கிடக்கின்றன. இதயங்கள் இரக்கத்தால் பதப்படுத்தப்பட்ட வேண்டும். உதடுகள் படைத்தவனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். அவன் பாதங்களில் தாழ்ந்து பணிந்து கிடக்க வேண்டும். மனமாற்றம் பெறுவோம் இன்றைய நாள் இனிய நாள்.